மேட்டூர்: சேலத்தில் மேட்டூரை தொடர்ந்து கெங்கவல்லிக்கு உட்பட்ட வனப்பகுதி கிராமத்தில் வனவிலங்கு தாக்கியதில் கன்றுக்குட்டி உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் சிறுத்தை தாக்கி கன்று உயிரிழந்ததாக வனத்துறையிடம் அளித்த தகவலை அடுத்து, கூண்டு, கேமரா பொருத்தி அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சேலம் மேச்சேரி பகுதியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சிறுத்தை நடமாட்டம் இருந்தது கண்காணிப்பு கேமரா பதிவு மூலம் தெரியவந்தது. மேச்சேரி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிறுத்தை நடமாட்டத்தால் கடும் அச்சம் அடைந்தனர். வனத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில், சிறுத்தையை பிடிக்க முடியவில்லை.
இந்நிலையில், கடந்த மூன்று வரத்துக்கு முன்பு மேட்டூரில் 12 ஆடுகள், மூன்று கோழி, ஒரு நாயை சிறுத்தை வேட்டையாடி கொன்றது. இதனால், கிராம மக்கள் பீதி அடைந்த நிலையில், தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் பல்வேறு பகுதிகளில் கேமராக்களை பொருத்தியும், சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்து காத்திருந்தனர்.
இந்நிலையில், மேட்டூர் வெள்ளக்கரடு பகுதியில் முனியப்பன் கோயில் அருகே மூன்று தினங்களுக்கு முன்பு மர்மமான முறையில் சிறுத்தை உயிரிழந்து கிடந்தது. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் குழு அமைத்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில், நேற்று சேலம் மாவட்டம் கெங்கவல்லிக்கு உட்பட்ட எடப்பாடி கிராமத்தில் கன்றுக்குட்டி வனவிலங்கால் வேட்டையாடப்பட்டு உயிரிழந்தது.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு கிராம மக்கள் கதவல் கொடுத்தனர். ஆத்தூர் டிஎஃப்ஒ சேவியர் , ரேஞ்சர் சிவக்குமார் தலைமையிலான அதிகாரிகள் எடப்பாடி வன கிராமத்தில் விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது, பொதுமக்கள் சிறுத்தை தாக்கியதில் கன்று உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
ஏற்கெனவே, மேட்டூரில் சிறுத்தை நடமாட்டத்தால் மக்கள் அச்சம் அடைந்துள்ள நிலையில், சேலம்-பெரம்பலூர் எல்லையில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக வந்த தகவலை அடுத்து, வனத்துறை அதிகாரிகள் 24 மணி நேர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், மேட்டூரில் சிறுத்தையை பிடிக்க கொண்டு வந்திருந்த கூண்டை, எடப்பாடி கிராமத்துக்கு வனத்துறை அதிகாரிகள் கொண்டு வந்து, சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தொடர்ந்து அப்பகுதியில் 12 சிசிடிவி கேமராக்களை பொருத்தி சிறுத்தை நடமாட்டம் உள்ளதா என கண்காணிப்புப் பணியில் வனத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து ஆத்தூர் வன அலுவலர் சேவியர் கூறும்போது, “சேலம்-பெரம்பலூர் வன எல்லையில் உள்ள எடப்பாடி கிராமத்தில் பசுங்கன்று மர்ம விலங்கால் வேட்டையாடப்பட்டுள்ளது. அங்கு சிறுத்தை நடமாட்டம் இருக்க வாய்ப்பில்லை. இருப்பினும், பொதுமக்கள் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாகக் கூறியுள்ள நிலையில், கூண்டு வைத்தும், கேமரா பொருத்தி வனத்துறையினர் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.” என்றார்.
+ There are no comments
Add yours