கோரிக்கை வைத்த 1 மணிநேரத்தில் மணிமண்டபம்.!

Spread the love

விடுதலைப் போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரன் அவர்களின் 66-ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று (செப்டம்பர் 11) அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்திற்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் மரியாதை செலுத்தி வருகின்றனர். இதனால் ராமநாதபுரம் மாவட்டம், மதுரையில் இருந்து ராமநாதபுரம் செல்லும் வழி முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில், பரமக்குடியில் இம்மானுவேல் சேகரனுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். தியாகி இம்மானுவேல் சேகரனார் அவர்களுக்கு திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்பட வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது. தேவேந்திர குல வேளாளர் கல்வியாளர் குழு, தேவேந்திரர் பண்பாட்டுக் கழகம், இம்மானுவேல் சேகரனாரின் மகள் ஆகியோர் முதலமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தனர் இந்த கோரிக்கையை அடுத்து முதல்வரின் அறிவிப்பு வெளியாகி இருந்தது.

தியாகி இம்மானுவேல் சேகரனார் அவர்களின் நினைவிடம் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் சுமார் ரூபாய் 3 கோடி மதிப்பீட்டில் இம்மானுவேல் சேகரனார் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் தமிழ்நாடு அரசின் சார்பில் கட்டப்படும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு குறித்து இமானுவேல் சேகரனார் மகள் பிரபாராணி, தனது தந்தை நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் பேசுகையில், கடந்த வருடம் போல இந்த வருடமும் அனைவரும் மரியாதை செலுத்த வந்ததில் மகிழ்ச்சி. கடந்த திங்கள்கிழமை அன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சென்று பார்த்தோம்.

அப்போது இம்மானுவேல் சேகரானர் நினைவுநாள் விழாவுக்கு வரக்கூறி அழைப்பு விடுத்தோம். மேலும் இம்மானுவேல் சேகரனார் நினைவு நாள் அல்லது பிறந்தநாளை அரசு விழாவாக நடத்த வேண்டும் என்றும், மணிமண்டபம் கட்ட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தோம்.

நாங்கள் 11 மணிக்கு சென்று முதல்வரை நேரில் பார்த்து இந்த கோரிக்கைகளை முன்வைத்தோம். பகல் 12 மணிக்கு எனக்கு அரசு அதிகாரிகளிடம் இருந்து அழைப்பு வந்தது. 1 மணிநேரத்தில் இமானுவேல் சேகரனார் மணிமண்டபம் குறித்த கோரிக்கைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துவிட்டார்.

மேலும், அதற்கான இடங்களையும் அதிகாரிகளே தேர்வு செய்து எங்களிடம் இந்த இடம் மணிமண்டபம் கட்டுவதற்கு ஏற்றதா என்றும் கேட்டுக்கொண்டனர். பின்னர் நேற்று இரவு அதிகாரிகள் கால் செய்து நாளைக்கு (இன்று) மணிமண்டபம் குறித்து அறிவிக்க உள்ளோம் என கூறினார்கள். இமானுவேல் சேகரனாருக்கு மணிமண்டபம் என்பது எங்கள் நீண்ட நாள் போராட்டம். எத்தனையோ அரசிடம் நாங்க கோரிக்கை வைத்தோம் அதனை இப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எங்களுக்கு உதவி செய்தார். எங்கள் எம்எல்ஏ முருகேசன் , கண்ணப்பன் ஆகியோர் இதில் பெரும் பங்காற்றியுள்ளனர் என இமானுவேல் சேகரனார் மகள் பிரபராணி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours