மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் கோவையில் இன்று தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல், கூட்டணி விவகாரங்கள், சாதகமான தொகுதிகள் மற்றும் கள நிலவரம் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொண்டதாக கூறப்பட்டது. ஆலோசனைக் கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.
அதன் பிறகு கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசிய கமல்ஹாசன், கோவையில் நமக்கு நல்ல வரவேற்பும், ஆதரவும் இருக்கிறது. அதனால் கோவையில் நான் போட்டியிட தயாராக உள்ளேன் என அறிவித்தார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி ஒரு தொகுதி என மொத்தமுள்ள 40 தொகுதிகளிலும் நாம் தேர்தல் வேலை செய்ய கட்சி நிர்வாகிகள் தயாராக இருக்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், சனாதனம் என்ற ஒரு வார்த்தை சொன்னதற்காக இவ்வளவு பெரிய பிரச்னையை உருவாக்குகிறார்கள். எங்களுக்கு அந்த வார்த்தையை சொன்னவர் பெரியார். திமுகவோ, வேறு எந்த கட்சியோ பெரியாரை சொந்தம் கொண்டாட முடியாது, பெரியாரை தமிழ்நாடே சொந்தம் கொண்டாடும். இந்தி ஒழிக என கூறவில்லை, தமிழ் வாழ்க என கூறுகிறோம். இந்தி பேசினால் தான் வேலை என்றால் அந்த வேலை எங்களுக்கு வேண்டாம். அன்பு ஒன்றுதான் எனக்கு தெரிந்த மதம் என இவ்வாறு அவர் பேசினார்.
இதனிடையே, கடந்த 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கினார் கமல் ஹாசன். இதனால் எம்ஜிஆர் போன்று வளம் வருவார் என பேசப்பட்டது. அந்தவகையில், கட்சி தொடங்கி உடனே 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் மக்கள் நீதிமய்யம் தனித்து போட்டியிட்டு 3.7 சதவிகித வாக்குகளைப் பெற்றது. இதன்பின், 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சரத்குமார், பாரிவேந்தர் கட்சியுடன் இணைந்து கூட்டணி அமைத்து போட்டியிட்டது.
ஆனால், சட்டசபைத் தேர்தலில் படு தோல்வியை சந்தித்தது மக்கள் நீதி மய்யம் வாக்கு சதவிகிதமும் 2.5 ஆக சரிந்தது. இதனால், சட்டசபை தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சியில் இருந்த முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகி பல்வேறு திடுக்கிடும் தகவல்களை தெரிவித்து கமலுக்கு ஷாக் கொடுத்தனர். இதனையடுத்து கட்சி மேலும் பலவீனமானது. பின்னர் மக்கள் நீதி மய்யம் 2.0 என்று புதிய நிர்வாகிகளை கமல்ஹாசன் அறிவித்தார். எனவே, தற்போது நாடாளுமன்ற தேர்தல் வரும் நிலையில், கட்சி பணியில் முனைப்பு காட்டி வருகிறார் கமல்.
அந்தவகையில், இன்று கோவையில் கட்சி நிர்வாகிகளுடன் கமல்ஹசன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். அப்போது பல்வேறு விஷயங்கள் குறித்து பேசப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலுக்கு 40 தொகுதிகளும் நிர்வாகிகள் தயாராக இருக்க வேண்டும் என்றும் கோவையில் நல்ல வரவேற்பும், ஆதரவும் இருக்கிறது. அதனால் கோவையில் நான் மீண்டும் போட்டியிட தயாராக உள்ளேன் என தெரிவித்துள்ளார்.
+ There are no comments
Add yours