வெப்ப அலையில் வடமாநில தொழிலாளி சுருண்டு விழுந்து மரணம் – ராமேஸ்வரத்தில் சோகம்

Spread the love

ராமேஸ்வரத்தில் வட மாநில தொழிலாளி கொளுத்தும் வெயிலில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சக தொழிலாளர்களுடைய பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமேஸ்வரம் அருகே அரியாங்குண்டு பகுதியில் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த வட மாநில இளைஞர்கள் வீடு எடுத்து தங்கி உள்ளனர். இவர்கள் குல்பி ஐஸ் தயார் செய்து ராமேஸ்வரம் தீவு முழுவதும் சைக்கிளில் சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக ராமேஸ்வரத்தில் வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. கடுமையான வெப்பக் காற்று வீசி வருவதால் ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கடுமையான அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்த நிலையில் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த நபிஸ் முகமது (36) என்ற வாலிபர் ராமேஸ்வரம் கோயில் அருகே, நேற்று மதியம் குல்பி ஐஸ் விற்பனை செய்து கொண்டிருந்தார். நீண்ட நேரமாக வெயிலில் நின்றிருந்த நபிஸ் முகமது திடீரென மயங்கி விழுந்துள்ளார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், நபிஸ் முகமது உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்த தகவல் அறிந்ததும் அவருடன் பணியாற்றி வரும் சக தொழிலாளர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்தனர். பிரேத பரிசோதனைக்காக நபிஸ் முகமது உடல் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலைப் பெற்று சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதற்காக ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் அரசு மருத்துவமனையில் காத்திருக்கின்றனர். வடமாநில வாலிபர் வெயில் கொடுமையால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours