சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ரூ.14.56கோடியில் அதிநவீன மருத்துவ உபகரணங்கள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன.
சென்னை அரசு ராஜீவ் காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.10.92 கோடியில் மூளை ரத்த நாளம் சார் கேத் ஆய்வகம், ரூ.1.2 கோடியில் எம்ஆர்ஐ இணக்கமான மயக்க மருந்து செலுத்தும் உபகரணம் மற்றும் கண்காணிப்பு சாதனங்கள், ரூ.1.25 கோடியில் இதயம் மற்றும் நுரையீரல் கருவி, ரூ.50.85 லட்சத்தில் அதிநவீன அல்ட்ரா சவுண்ட் இயந்திரம், அதி நவீன ரத்தநாள அடைப்பு நீக்கும் மற்றும் உறிஞ்சும் கருவி, அதிநவீன லேசர் கருவி, ரூ.65 லட்சத்தில் போதை மருந்துகண்டறியும் ராண்டக்ஸ் மல்டிஸ்டாட் (தானியங்கி) கருவி, ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் காற்று மாசு அளக்கும் கருவி ஆகியவற்றை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார்.
அப்போது, அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: சென்னை அரசு ராஜீவ் காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.14.56 கோடியில் அதி நவீன மருத்துவ உபகரணங்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதில், ரூ.10.92 கோடியில் மூளை ரத்தநாளம் சார் கேத் ஆய்வகம் மூலம், மூளை ரத்தக் குழாய்களில் உண்டாகும் ரத்த உறைவு மூலம் ஏற்படுகிற திடீர் பக்கவாதத்தை கண்டறியவும், ரத்த குழாய்களில் ஏற்படும் உறைவை அகற்றும் மெக்கானிக்கல் திராம்பெக்டமி எனும் சிகிச்சையை வழங்கிடவும் பயன்படுகிறது.
+ There are no comments
Add yours