சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு பயணிக்க கிளாம்பாக்கம் செல்ல வேண்டியிருப்பதால் அரசு விரைவு பேருந்துகளில் பயணக் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விரைவு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது: கோயம்பேட்டில் நெரிசலைக் குறைக்கும் வகையில் கிளாம்பாக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு பேருந்துமுனையம் அமைக்கப்பட்டு, அதனைமுதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் தொடங்கி வைத்தார். இதையடுத்து, தென் தமிழகம் உள்ளிட்ட பல்வேறுபகுதிகளுக்குச் செல்லும் விரைவு பேருந்துகள், கிளாம்பாக்கம் முனையத்தில் இருந்தே இயக்கப்படுகின்றன.
பயணிகள் வலியுறுத்தல்: முன்னதாக கோயம்பேட்டில் இருந்து இயக்கப்பட்ட பேருந்துகள், அங்கிருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் இருந்து இயக்கப்படுவதால் கட்ட ணத்தை குறைக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தினர். இதையடுத்து, முன்பதிவு செய்து பயணிப்போருக்கு பயணம் முடிந்தவுடன் வித்தியாசத் தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. பின்னர், உடனுக்குடன் நடத்துநர்களே வித்தியாசத் தொகையை பயணிகளிடம் வழங்க அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. தற்போது பேருந்து பயணக் கட்டணமே குறைக்கப்பட்டுள்ளது.
இதன்படி விரைவு பேருந்துகளைப் பொருத்தவரை அல்ட்ரா டீலக்ஸ் பேருந்துகளில் கிமீ-க்கு ரூ.1 வசூலிக்கப்படுகிறது. அதேபோல் குளிர்சாதனமில்லா வசதி கொண்ட பேருந்துகளில் படுக்கையில் பயணிக்க ரூ.1.50, குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகளில் ரூ.2 என்ற வீதம் கட்டணம் வசூலிக்கப் படுகிறது.
அதன்படி, 30 கிமீ தூரம் என்பதைகணக்கில் கொண்டு, பயணக் கட்டணத்தில் ரூ.30 முதல் ரூ.60 வரை பயணக் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணக் குறைப்பு மாநகர பேருந்துகளில் பயணித்து, அவர்கள் கிளாம்பாக்கம் வந்தடைய உதவும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
+ There are no comments
Add yours