சென்னை: சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்க, ஆன்லைன் டிக்கெட் எடுக்க உதவும் சர்வர் செவ்வாய்க்கிழமை காலை திடீரென முடங்கியது. இதனால், பயணிகள் ஆன்லைனில் மெட்ரோ ரயில் டிக்கெட் எடுக்க முடியாமல் தவித்தனர். மேலும், டிக்கெட் கவுன்ட்டரில் வரிசையில் நெடுநேரம் காத்திருந்து டிக்கெட் எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
சென்னையில் இரண்டு வழித்தடங்களில் 54 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் நாள்தோறும் சுமார் 3 லட்சம் பேர் பயணிக்கின்றனர். மெட்ரோ ரயில் பயணிகளுக்கு நம்பகத் தன்மை மற்றும் பாதுகாப்பான பயண வசதியை மெட்ரோ ரயில் நிறுவனம் ஏற்பாடு செய்து கொடுத்து வருகிறது. இதனால், மெட்ரோ ரயில்களில் பயணிப்போர் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரிக்கிறது.
குறிப்பாக, தினசரி காலை, மாலை வேளைகளில் மெட்ரோ ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதுகிறது. பெரும்பாலான ரயில் நிலையங்களில் பரபரப்பாக காணப்படும்.
இந்நிலையில், மெட்ரோ ரயில்களில் பயணிக்க ஆன்லைன் டிக்கெட் எடுக்க உதவிடும் சர்வர், தொழில்நுட்பகோளாறால் இன்று காலை 7.40 மணிக்கு திடீரென முடங்கியது. இதனால், பயணிகள் ஆன்லைன் டிக்கெட் எடுக்க முடியாமல் தவித்தனர்.
இதையடுத்து, மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் கவுன்ட்டரில் சென்று டிக்கெட் எடுக்க பயணிகள் அறிவுறுத்தப்பட்டனர். இதன் காரணமாக, மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் கவுன்ட்டர்களில் வரிசையில் காத்திருந்து டிக்கெட் எடுத்து பயணித்தனர். இதற்கிடையில், சர்வரில் ஏற்பட்ட கோளாறை சரிசெய்யும் பணியில் பொறியாளர்கள் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்துக்கு மேலாக போராடி, சர்வரில் ஏற்பட்டை கோளாறை காலை 8.52 மணிக்கு சீரமைத்தனர்.
இதைத்தொடர்ந்து, வழக்கம் போல ஆன்லைன் டிக்கெட் பதிவு நடைபெற தொடங்கியது. இதுகுறித்து மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், “சர்வரில் ஏற்பட்ட கோளாறு சீரமைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, சிங்கார சென்னை அட்டை, மெட்ரோரயில் பயண அட்டை, மொபைல் க்யூ ஆர் கோடு உள்ளிட்டவைகள் மூலமாக டிக்கெட் எடுப்பது தங்குதடையின்றி நடைபெறுகிறது” என்றார்.
+ There are no comments
Add yours