புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தைச் சேர்ந்த கார்த்திக், அறந்தாங்கியை சேர்ந்த சத்யராஜ் என்பவரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.1 லட்சம் மோசடி செய்ததாக அறந்தாங்கி போலீஸாரால் கைது செய்யப்பட்டார். பின்னர், இந்த வழக்கில் சவுக்கு சங்கரை சேர்த்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் ஆஜர்படுத்துவதற்காக போலீஸார் சவுக்கு சங்கரை நேற்று அழைத்து வந்தனர். அறந்தாங்கி குற்றவியல் நீதிபதி விடுப்பில் உள்ளதால், ஆலங்குடி குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றத்தில் சங்கர் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.விஜயபாரதி, சவுக்கு சங்கரை சொந்த ஜாமீனில் விடுவித்தார்.
நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த சவுக்கு சங்கர், ‘‘பொய் வழக்கு போடுவதில் ஆர்வம் காட்டும் போலீஸார், கள்ளச்சாராய ஒழிப்பில் ஆர்வம் காட்டியிருந்தால் கள்ளக்குறிச்சியில் இத்தனை பேர் உயிரிழந்திருக்க மாட்டார்கள். கள்ளக்குறிச்சி சம்பவத்துக்கு முழு பொறுப்பேற்று தமிழக முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும்” என்று முழக்கமிட்டார். பின்னர், போலீஸார் அவரை வேனில் ஏற்றிச் சென்றனர்.
+ There are no comments
Add yours