புதுக்கோட்டை: திமுக அணியில் ஏதோ கொந்தளிப்பு இருப்பதாகத் தெரிகிறது. அது வெளியே வரும் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், “நடிகர் விஜய் திமுகவின் பாஷையில்தான் பேசுகிறார். ஆகையால், அரசியலில் யாருடைய வாக்குகளை அவர் பிரிப்பார் என்பதைப் பற்றி கவலைப்பட ஒன்றும் இல்லை.
நாட்டின் குடியரசுத் தலைவர்களாக, மாநில முதல்வர்களாக பட்டியலின சமூகங்களைச் சேர்ந்தவர்கள் இருந்துள்ளனர். பாஜகவின் தலைமைப் பொறுப்பிலும் இருந்திருக்கிறார்கள். எனவே. தமிழகத்தில் பாஜகவை மக்கள் ஆதரித்தால் இங்கும் கூட அதுபோன்ற வாய்ப்பு வரலாம். திமுக கூட்டணியில் தான் விசிக தலைவர் திருமாவளவன் இருக்கிறார். எனவே, அவர் தான் இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டும்.
உதயநிதி ஸ்டாலின் விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்தால் என்ன? துணை முதல்வராகவோ, செயல் முதல்வராகவோ இருந்தால் என்ன மாற்றம் வந்துவிடப் போகிறது? அதனால், இதை விவாதிக்க வேண்டியதில்லை.
ஆளுநரின் தேநீர் விருந்தில் முதல்வரும், அமைச்சர்களும் கலந்து கொண்டனர். ஆனால், கூட்டணிக் கட்சியினர் ஒருவர் கூட கலந்து கொள்ளவில்லை. திமுக அணியில் ஏதோ கொந்தளிப்பு இருப்பதாகத் தெரிகிறது. அது வெளியே வரும்” என்று கூறினார்.
+ There are no comments
Add yours