துணை முதல்வர் ஆகிறார் உதயநிதி ?

Spread the love

உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆகிவிடுவார் என்று அரசியல் வட்டாரத்தில் நேற்று முதல் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அமைச்சர்கள் ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் மத்தியிலும் இந்த விஷயம் கிசுகிசுவாக பேசப்பட்டது.

தி.மு.க. இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 2-வது முறையாக இளைஞரணிச் செயலாளராக பொறுப்பேற்றது முதல் அவருக்கு முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது. சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.வான 1½ வருடத்தில் கடந்த டிசம்பர் 14-ந் தேதி அவர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சரானார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு அடுத்த இடத்தில் அவரை தலைவராக கட்சி நிர்வாகிகள் பார்க்கிறார்கள். ‘சின்னவர்’ என்று பவ்யமாக அழைக்கின்றனர். அமைச்சராக பொறுபேற்ற பிறகு மூத்த கட்சி நிர்வாகிகளின் துணையின்றி டெல்லி சென்று பிரதமர் மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசிவிட்டு வந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இது அரசியலில் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. இதைத் தொடர்ந்து அமைச்சர் உதயநிதிக்கு கூடுதல் முக்கியத்துவம் கிடைக்க தொடங்கியது.

இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் இம்மாதம் இறுதி வாரத்தில் அமெரிக்காவிற்கு செல்ல உள்ளார். அங்கு, அதிக நாட்கள் தங்கும் நிலையில், உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்க, கட்சி வட்டாரங்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது. இந்த முறையாவது இது வதந்தியாக இல்லாமல் உதயநிதி துணை முதல்வராக பதவியேற்பார் என்று தொண்டர்களும், நிர்வாகிகளும் உறுதியாக நம்புகின்றனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours