அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி முன்னிலையில், மாற்றுக் கட்சியினர் அதிமுக-வில் இணையும் நிகழ்ச்சி, சேலத்தை அடுத்த ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் மாவட்ட அலுவலகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், சேலம் புறநகர் மாவட்டச் செயலாளர் இளங்கோவன் உள்பட அதிமுக-வினர் பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்குப் பின்னர் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியது: ஏழை மக்கள், தொழிலாளர்கள் குறைந்த விலையில் தரமான, சுவையான உணவினை வயிறார அருந்த வேண்டும் என்பதற்காக 664 இடங்களில் அம்மா உணவகங்களை மறைந்த முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். அவரது காலத்திலும், அவரது மறைவுக்குப் பின்னரும் அம்மா உணவகங்கள் சிறப்பாக செயல்பட்டு வந்தன.
ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், அம்மா உணவகங்களுக்கு தரமான உணவுப் பொருட்கள் வழங்கப்படவில்லை. இதனால், மக்களுக்கு தரமான உணவு வழங்காததால், அம்மா உணவகங்களுக்கு சாப்பிட வருவோரின் எண்ணிக்கை குறைந்தது. அங்குள்ள பணியாளர்களும் பாதியாக குறைக்கப்பட்டனர். சென்னையில் 407 அம்மா உணவகங்கள் இருந்த நிலையில், அதில் 19 உணவகங்களை மூடிவிட்டனர்.
அம்மா உணவகம், ஏழைகளுக்கும், தொழிலாளர்களுக்கும் வரப்பிரசாதம். அதனை கவனிக்காததால், இந்த அரசு மீது மக்களுக்கும், தொழிலாளர்களுக்கும் வெறுப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் தான், அம்மா உணவகத்துக்கு சென்று முதல்வர் ஆய்வு செய்து, நாடகமாடியுள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக அவர் ஏன் ஆய்வு செய்யவில்லை. அமைச்சர்கள், அதிகாரிகள், மேயர் என எவராவது ஆய்வு செய்தார்களா?.
உதய் மின் திட்டத்தில் பல்வேறு வேறு நன்மைகள் இருந்ததால், அதில் அதிமுக அரசு கையெழுத்து போட்டது. இதில் எல்லா மாநிலங்களும் கையெழுத்து போட்டுள்ளன. தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துவிட்டது. கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன.
தமிழகத்தில், 200 நாட்களில் 595 கொலைகள் நடந்துள்ளன. தமிழகம் கொலை மாநிலமாக மாறிவிட்டது. காவல்துறைக்கு முழு சுதந்திரம் கிடையாது. கொலைகள் பலவும் கஞ்சா போதையில் தான் அதிகமாக நடக்கின்றன. கஞ்சா விற்பனை செய்யாத இடமே கிடையாது என நிலை மாறிவிட்டது. குறிப்பாக, பள்ளிகள், கல்லூரிகள் இருக்கும் இடங்களில் அதிகளவில் கஞ்சா விற்பனை அதிகமாக இருக்கிறது.
அனைத்து கல்லூரி பகுதிகளிலும், காவலர்களை நிறுத்தி, கஞ்சா விற்பனையை கண்டுபிடித்து, தடுத்து நிறுத்த வேண்டும். இல்லாவிடில், மாணவர்கள், இளைஞர்கள் சீரழிந்துவிடுவர். அதிமுக-வில் இருந்து போனவர்கள் பற்றி ஏன் மீண்டும் மீண்டும் பேசுகிறீர்கள். ஓபிஎஸ் உள்பட மற்றவர்களுக்கு நாங்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
ஆம்ஸ்ட்ராங்க் கொலையில், என்கவுன்ட்டர் செய்யப்பட்ட ரவுடி, கைது செய்யப்படவில்லை. அவராகவே சரணடைந்தார். கொலைக் குற்றவாளியான அவரை கை விலங்கு போட்டு அழைத்து சென்றிருக்க வேண்டும். இவற்றை ஏன் காவல்துறை பின்பற்றவில்லை. இது பற்றி சட்டத்துறை அமைச்சருக்கு தெரியாதா? அதிமுக ஆட்சிக்கு வந்ததும் இவையெல்லாம் தோண்டி எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
அப்போது, உதயநிதியை துணை முதல்வராக நியமிக்கப்பட்டால் அதனை ஆதரிப்பீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்தபோது, “அதனை எப்படி ஆதரிக்க முடியும். அவர் கருணாநிதியின் பேரன், ஸ்டாலினின் மகன். அவ்வளவு தான். திமுக-வில் எத்தனையோ ஆண்டுகளாக உழைத்தவர்கள் இருக்கிறார்கள். அனுபவமிக்க அமைச்சர்கள் பலர் இருக்கின்றனர். அவர்களுக்கு துணை முதல்வர் பதவி தரலாம். ஆனால், அது போன்று எதுவும் நடக்காது. ஏனென்றால் அது குடும்ப கட்சி.
மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் பிரச்சினையை அரசு முறையாக பரிசீலித்து, கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். அடுத்து வரவுள்ள உள்ளாட்சித் தேர்தல், சட்டப்பேரவை தேர்தல் ஆகியவற்றில் மேற்கொள்ள வேண்டிய பிரச்சார உத்திகளை, கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். அவற்றை வரும் தேர்தல்களில் பின்பற்றுவோம். திமுக-வின் 3 ஆண்டுகால ஆட்சியில் மின் கட்டண உயர்வு, குடிநீர் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, கள்ளச் சாராய மரணம் உள்பட இந்த ஆட்சியின் மக்கள் விரோத செயல்களை மக்களிடம் எடுத்துக்கூறி தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும்.
திமுக-வின் 3 ஆண்டு கால ஆட்சியில், தமிழகத்துக்கு என்ன திட்டம் கொண்டு வந்தனர். மதுரையில் நூலகம் ஒன்றையும், சென்னையில் மருத்துவமனை ஒன்றையும் கட்டினர். இதை தவிர வேறு எதுவும் செய்யவில்லை. பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணமில்லா பயணம், மகளிர் உரிமைத் தொகை ஆகியவற்றை கூறுகின்றனர். அவையெல்லாம் திட்டங்கள் அல்ல. அவை, அறிவிப்புகள் மட்டுமே, அதை யார் வேண்டுமானாலும் செய்ய முடியும்.
பெண்கள் கட்டணமில்லா பயணம் செய்வதற்கான தொகை, போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு கொடுக்க வேண்டும். உரிமைத் தொகை வழங்க பணம் வேண்டும். ஆனால், இதற்கு நிதி ஆதாரத்தை பெருக்கி இருக்க வேண்டும். ஆனால், இந்த அரசு கடன் வாங்கி தான் தொகையை கொடுக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், ரூ.3.65 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளது. இந்த ஆட்சியே கடனில் தான் நடக்கிறது” என்றார்.
+ There are no comments
Add yours