வேட்பு மனு தாக்கல் செய்தார் வீரப்பன் மகள் வித்யாராணி !

Spread the love

தந்தையின் சமாதிக்கு சென்று வணங்கி உறுதிமொழி எடுத்துக் கொண்ட பிறகு, நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வீரப்பன் மகள் வித்யாராணி தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளராக வீரப்பன் மகள் வித்யாராணி போட்டியிடுகிறார். அவர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னதாக, சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள மூலக்காடு என்றும் கிராமத்தில் உள்ள தனது தந்தை வீரப்பனின் சமாதிக்கு வித்யாராணி, தனது ஆதரவாளர்களுடன் சென்றார்.

அங்கு சமாதியில் வேட்பு மனுவை வைத்து வணங்கி, உறுதி மொழி எடுத்துக் கொண்டார். இதன் பின்னர் கிருஷ்ணகிரிக்கு வந்த அவர், கிருஷ்ணகிரி பழையபேட்டை, 5 ரோடு ரவுண்டானா வழியாக பேரணியாக சென்று ஆட்சியர் அலுவலகம் வந்தார். பின்னர், தனது வேட்புமனுவை கிருஷ்ணகிரி மாவட்ட தேர்தல் அலுவலர் கே.எம்.சரயுவிடம் தாக்கல் செய்தார்.

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே மூலக்காட்டில் உள்ள வீரப்பனின் சமாதியில் உறுதிமொழி எடுத்துக் கொண்ட வீரப்பனின் மகளும், நாம் தமிழர் கட்சியின் கிருஷ்ணகிரி வேட்பாளருமான வித்யாராணி வீரப்பன்.

முன்னதாக அவர் கூறும்போது, “பாஜகவில் மாநில பொறுப்பில் இருந்தேன். அந்தக் கட்சியிலும் மனநிறைவுடன் பணியாற்றினேன். ஆனால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நான் பெரிய அளவில் செயல்படவில்லை. ‘கூச முனிசாமி வீரப்பன்’ ஆவணப்பட தொடரில் என் தந்தை மக்களின் நலனுக்காக பேசிய வீடியோக்களை பார்த்தேன்.

என் தந்தை எல்லை தெய்வமாக இருந்து இப்பகுதி மக்களுக்காவும் அடித்தட்டு மக்களின் வளர்ச்சிக்காகவும் பாடுபட்டார். அதே கொள்கைகளை கொண்டு இன்று நாம் தமிழர் கட்சியும் போராடுகிறது. அந்தக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டதால், நாம் தமிழர் கட்சியில் சேர்ந்தேன். கட்சியில் சேரும்போதே ‘நீ தான் வேட்பாளர்’ என சீமான் தெரிவித்தார். ஆனால், பாஜகவிலும் சீட் தருவதாக கூறினர். நான் சீமானுக்கு கொடுத்த வாக்கால் அதை நிராகரித்து விட்டேன்.

நான் வெற்றி பெற்றால் விவசாயிகள், மலைவாழ் மக்கள் முன்னேற்றம் மற்றும் கல்வி வளர்ச்சிக்கு பாடுபடுவேன். வீரப்பனின் மகளாக, நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மக்களை சந்திப்பேன். படேதலாவ் திட்டம், அஞ்செட்டியில் அணை உள்ளிட்ட நீர் திட்டங்கள் விரைந்து அமைக்க பாடுபடுவேன்.

இளைஞர்கள் சிறு குறு தொழில்கள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். எந்த கட்சியையும் எதிர்த்து பிரசாரம் செய்ய மாட்டேன். நாங்கள் செய்யப்போகும் திட்டங்கள் குறித்தே எங்கள் பிரசாரம் இருக்கும்” என்றார் வித்யாராணி.

கிருஷ்ணகிரி மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வித்யாராணி (34) பி.ஏ.பி.எல் படித்துள்ளார். தற்போது கிருஷ்ணகிரியில் வசித்து வருகிறார். மேலும், கிருஷ்ணகிரியில் மழலையர் பள்ளியின் தாளாளராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours