காவிரி எங்கள் உரிமை என்ற முழக்கத்தை முன் வைத்து செப்டம்பர் 30-ஆம் தேதி ஆளுநர் மாளிகை நோக்கி மாபெரும் பேரணி நடத்தவிருப்பதாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து வேல்முருகன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறிருப்பதாவது :
காவிரி ஆணையம் கூறிய மிக மிகச் சிறிதளவு தண்ணீரான நொடிக்கு 5000 கனஅடி தண்ணீரைத் தமிழ்நாட்டுக்கு கர்நாடகம் திறந்துவிட வேண்டும் என்ற உச்சநீதிமன்றம் 21.9.2023 அன்று தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பை எதிர்த்து கர்நாடகாவில் பரவலாக கன்னட இனவெறி அமைப்புகளும், இனவெறி உழவர் சங்கங்களும் பல வகையான போராட்டங்கள் நடத்தி வருகின்றன.
குறிப்பாக, காவிரி விவகாரத்தில், காங்கிரஸ், பா.ஜ.க., மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய முப்பெரும் எதிர்க்கட்சிகளும், ஒன்றை புள்ளியில் நின்று, தமிழ்நாட்டுக்கு எதிராகவும், கர்நாடகத்தில் வாழும் தமிழர்களுக்கு எதிராகவும், கன்னட இனவெறியோடு போராடி வருகின்றனர்.
கன்னட சலுவாலி என்ற கன்னட இனவெறி அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராசும், கர்நாடகா ரக்சனா வேதிகே அமைப்பின் தலைவரான நாராயண கவுடாவும், கர்நாடகத்தில் வாழும் தமிழர்களுக்கு எதிராக இனவெறித் தாக்குதல் நடத்தக் கன்னடர்களை தூண்டி வருகிறார்கள்.
“எங்களது காவிரி எங்களது உரிமை” என்ற முழக்கத்தை வைத்து, கர்நாடகாவில் உள்ள முன்னணி நடிகர்களான கிச்சா சுதீப், தர்ஷன் தொகுதீபா உள்ளிட்ட பலரும், அம்மாநிலத்து ஆதரவாக நிற்கின்றனர். கன்னட அமைப்பினர் நடத்திய போராட்டத்தில், 8 கோடி தமிழ்நாட்டு மக்களின் அரசுப் பிரதிநிதியாக இருக்கும், மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் படத்தை கிழித்து எறிந்திருக்கிறார்கள். அதோடு நில்லாமல், தமிழ்நாடு முதலமைச்சரின் உருவப்படத்தை முன் வைத்து, இறுதிச்சடங்குகள் செய்து அவமதித்துள்ளனர்.
பெங்களூரில் உள்ள தமிழர்கள் வெளியேற வேண்டும் என்றும் அவர்களை மு.க.ஸ்டாலின் அழைத்துச் செல்ல வேண்டும் என்று வாட்டாள் நாகராசு ஆவேசமாக கூறியுள்ளார். அதோடு, பெங்களூரில் உள்ள தமிழர்கள் தண்ணீர் குடிக்கக் கூடாது, அது கன்னடர்களின் தண்ணீர் என்றும் பேசியுள்ளார்.
கர்நாடகாவில் வாழும் தமிழர்களின் உயிருக்கும், உடமைக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கும் இச்சூழல், கடந்த 1991 ஆம் ஆண்டு, அரங்கேறிய தமிழின படுகொலையும், தமிழர் சொத்து பேரழிவும் இப்போது மீண்டும் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
காவிரித் தீர்ப்பாயம் 25-6-1991 அன்று அளித்த இடைக்கால தீர்ப்பை உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, அவ்வாண்டு நவம்பர் மாதம் இந்திய ஒன்றிய அரசு தனது அரசிதழில் வெளியிட்டது. இதை எதிர்த்து, அப்போதிருந்த காங்கிரஸ் முதலமைச்சர் பங்காரப்பா கர்நாடக முழு அடைப்பு நடத்தச் செய்தார்.
அப்போது, கன்னட இனவெறியர்கள், நூற்றுக்கும் மேற்பட்ட கர்நாடக வாழ் தமிழர்களை இனப்படுகொலை செய்தனர். பல்லாயிரக் கணக்கான தமிழர் வீடுகளை, கடைகளைச் சூறையாடி தீக்கிரையாக்கி னார்கள். அப்போதெல்லாம் கர்நாடக காவல்துறை எந்த தடுப்பு நடவடிக்கையோ, பாதுகாப்பு நடவடிக்கையோ எடுக்கவில்லை.
இரண்டு இலட்சம் கர்நாடகத் தமிழர்கள் காடுகளின் வழியாகத் தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்து சேர்ந்தனர். 2016-இல் உச்சநீதிமன்றம் தமிழ்நாட்டிற்கு உடனடி நிவாரணமாக தண்ணீர் திறந்து விட கர்நாடகத்துக்கு ஆணையிட்டது. அதை எதிர்த்து அப்போது கன்னடர்கள் பெங்களூர் டெப்போ விலிருந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த கேபிஎன் பேருந்துகளையும், லாரிகளையும் எரித்த போது, காவல்துறை உடனடியாக தலையிடவில்லை.
காவிரி மேலாண்மை ஆணையம், வழக்கம்போல், தமிழ்நாட்டுக்குக் கொஞ்சம் தண்ணீர் திறந்து விடுங்கள் என்று கேட்டுக்கொண்டு முடிந்துவிட்டது. எக்காலத்திலும் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது என்ற நிதர்சன உண்மையை புரிந்துக் கொண்ட பாஜக மோடி அரசு, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கர்நாடகாவில் வாக்கு எண்ணிக்கை சரிந்து விடுமோ என்ற அச்சத்தில், ஒன்றியத்தில் வழக்கம் போல் வாய்மூடி மௌனம் காக்கிறது.
காவிரி ஆணையத்தின் பரிந்துரையையும் கர்நாடக அரசு செயல்படுத்த போவதில்லை. ஏற்கனவே ஒரு தடவை கூட காவிரி ஆணையத்தின் பரிந்துரையை கர்நாடகம் செயல்படுத்தியதும் இல்லை. அதன்மீது காவிரி ஆணையமும் மோடி அரசும் எந்த ஒரு சட்ட நடவடிக்கையும் எடுப்பதில்லை.
காவிரி ஆணையத்தால் தமிழ்நாட்டுக்கு எந்த ஒரு பலனும் இல்லை; தமிழ்நாட்டுக்கு சட்டப்படி கர்நாடகம் தரவேண்டிய காவிரி பங்கு நீரை, மோடி அரசும் பெற்றுத்தர முடியவில்லை; இனிமே பெற்று தர போவதில்லை.
ஒன்றியத்தில் காங்கிரஸ் ஆண்டாலும், பாஜக ஆண்டாலும் சரி; கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆண்டாலும், பாஜக ஆண்டாலும் சரி. அவர்களை பொறுத்தவரை, தமிழர்கள் ஏமாளிகள்; இளிச்சவாயர்கள் என்பதே மன ஓட்டம்.
இதனால் காவிரி எங்கள் உரிமை என்ற முழக்கத்தை முன் வைத்தும், தமிழ்நாடு அரசையும், முதலமைச்சரையும் கன்னட அமைப்புகள் அவமதித்ததை கண்டித்தும், செப்டம்பர் 30ஆம் தேதி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாபெரும் பேரணியை முன்னெடுப்பதோடு, ஆளுநர் மாளிகை முற்றுகையிட உள்ளது என வேல்முருகன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours