சென்னை: திருச்சியில் தவெக கட்சியின் முதல் மாநாட்டை நடிகர் விஜய் நடத்த இருக்கிறார். இதற்காக நிலத்தை அளவிடும் பணிகள் நடந்து வருகிறது.
நடிகர் விஜய் இந்த வருட ஆரம்பத்தில் தனது அரசியல் வருகையை உறுதிப்படுத்தி தமிழக வெற்றிக் கழகம் எனத் தனது கட்சிப் பெயரையும் அறிவித்தார். அதன் பிறகு படங்களில் பிஸியாக இருந்தாலும் கட்சிக்கான உறுப்பினர் சேர்க்கை, மாணவர்களுக்கான உதவித் தொகை என அரசியல் பணிகளிலும் கவனம் செலுத்தி வந்தார் விஜய். கட்சி அறிவித்து ஆறு மாதங்கள் கடந்துள்ள நிலையில், இதன் முதல் மாநாடு திருச்சியில் நடைபெற இருக்கிறது.
இதற்காக, கடந்த சில நாட்களுக்கு முன்பு தவெக கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இடத்தை தேர்வு செய்து ஆய்வு செய்திருக்கிறார். திருச்சியில் பொன்மலை ஜி கார்னரில் ரயில்வேக்கு சொந்தமான இடத்தை செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 25 வரை வாடகைக்குத் தருமாறு கேட்டிருக்கிறார்களாம். தவெக நிர்வாகிகள் அளித்துள்ள கடிதத்தின் அடிப்படையில் அங்கு நிலத்தை அளவிடும் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் மாநாடு எப்போது நடக்க இருக்கிறது என்பதை தவெக அறிவிக்கும் என எதிர்பார்க்கலாம்.
+ There are no comments
Add yours