விஜய் கட்சிக்கொடி அறிமுகம்- தேதி அறிவிப்பு

Spread the love

சென்னை: தனது கட்சியின் கொடியை ஆக.,22ல் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அறிமுகம் செய்ய இருக்கிறார்
விஜய் மக்கள் இயக்கம் என்ற தனது ரசிகர் மன்றத்தை, தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியாக மாற்றம் செய்து, கடந்த பிப்ரவரி மாதம் நடிகர் விஜய் அறிவித்தார். கட்சியின் அறிவிப்பை வெளியிடும் போதே, 2026 சட்டசபை தேர்தல் தான் தங்களின் இலக்கு என்றும் தெளிவுபடுத்தி விட்டார்.

சினிமாவில் இருந்து விலகி முழுநேர அரசியலில் ஈடுபடவும் முடிவு செய்துள்ள விஜய், தேர்வில் முதல் மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு இந்த ஆண்டும் விருது மற்றும் ஊக்கத்தொகை வழங்கினார். முழுக்க முழுக்க இளைஞர்களை குறிவைத்தே அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

இதனிடையே, த.வெ.க., முதல் அரசியல் மாநாடு, வரும் செப்., 22ம் தேதி மதுரை அல்லது திருச்சியில் நடத்த திட்டமிட்டிருந்தது. ஆனால், ஆளும் கட்சியினரின் மறைமுக நெருக்கடிகள் காரணமாக, அங்கு இடம் கிடைக்கவில்லை. இதனால், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியாருக்கு சொந்தமான 85 ஏக்கர் நிலத்தில் மாநாட்டை நடத்த தமிழக வெற்றிக் கழகம் முயற்சித்து வருகிறது.

மாநாடு நடத்தி கட்சியின் கொடி, கொள்கைகள் உள்ளிட்ட விபரங்கள் அறிவிக்கப்படும் என்று கூறியிருந்த நிலையில், வரும் 22ம் தேதி பனையூரில் உள்ள அலுவலகத்தில் கட்சியின் கொடியை நடிகர் விஜய் வெளியிடப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கட்சியின் கொடியின் நடுவில் வாகை மலரை சின்னமாக பொறிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வாகை என்றால் வெற்றி என்ற அர்த்தமாகும். எனவே, தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியின் பெயருக்கு வாகை மலர் பொருத்தமாக இருக்கும் என்று கட்சியினரால் சொல்லப்படுகிறது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours