மதுரை: நடிகர் விஜய் வரவால் அனைத்துக் கட்சிகளுக்கும் பாதிப்பு ஏற்படும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.
தமாகா உறுப்பினர் சேர்க்கை குறித்த ஆலோசனைக் கூட்டம் மதுரையில் நேற்று நடைபெற்றது. கட்சித் தலைவர் ஜி.கே.வாசன்,முன்னாள் எம்.பி. சித்தன், முன்னாள் எம்எல்ஏ ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சென்னையில் விமான சாகச நிகழ்ச்சிக்கு தமிழக அரசு முறையான ஏற்பாடுகளை செய்யவில்லை. இதில் 5 பேர் இறந்ததற்கு மாநில அரசின் அஜாக்கிரதையே காரணம். உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கவேண்டும்.
பருவமழை முன்னெச்சரிக்கை: தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து, கொலை, திருட்டுபோன்ற குற்றங்கள் அதிகரித்துள்ளன. தமிழக அரசு காலக்கெடு நிர்ணயித்து மதுக்கடைகளை மூடலாம். ஆனால், மத்திய அரசு மீது பழிபோடுகிறது. பருவமழை இயல்பைவிட அதிகமாக இருக்கவாய்ப்புள்ளதால், உள்ளாட்சிநிர்வாகங்கள் தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மதுரையில் சாலைகள் குண்டு, குழியுமாக, ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளன. திமுக அரசு வரிகளை உயர்த்தி வருகிறது.
நடிகர் விஜய் தொடங்கிய கட்சியால், அனைத்துக் கட்சிகளுக்கும் பாதிப்பு ஏற்படும். அடுத்தடுத்து பண்டிகைகள் வருவதால், ரேஷன்கடைகளில் தட்டுப்பாடின்றி பொருட்களை விநியோகிக்க வேண்டும். கல்வி நிறுவனங்களுக்கு அருகே போதைப் பொருட்கள் விற்கப்படுவதை தடுக்க தனி காவல்படையை உருவாக்க வேண்டும். இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார்.
+ There are no comments
Add yours