ராமநாதபுரம்: பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டுக்கு 3 நாள் பயணமாக வந்துள்ளார். இன்று அவர் ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடிக்கு சென்று ராமர் பாலம் இருந்ததாக கூறப்படும் இடம் மற்றும் கோதண்டராமர் கோவிலில் சிறப்பு பூஜை செய்து தரிசனம் செய்ய உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் பயணமாக நேற்று முன்தினம் தமிழ்நாடு வந்தார். நேற்று முன்தினம் சென்னையில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை அவர் தொடங்கி வைத்தார். அதன்பிறகு ஆளுநர் மாளிகையில் ஓய்வெடுத்தார் பிரதமர் மோடி. இதையடுத்து 2வது நாளான நேற்று பிரதமர் மோடி அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ராமருடன் தொடர்புடைய கோவிலில் தரிசனம் செய்ய தொடங்கினர்.
அதன்படி நேற்று பிரதமர் மோடி திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள ராமநாதசுவாமி கோவிலில் தரிசனம் செய்தார். முன்னதாக அங்குள்ள 22 தீர்த்தங்களில் பிரதமர் மோடி புனித நீராடினார். இந்நிலையில் தான் பிரதமர் மோடியின் 3வது நாளான இன்று தனுஷ்கோடி செல்கிறார். அதன்படி காலை 9.30 மணிக்கு ராமர் பாலம் கட்டப்பட்ட இடமாக கூறப்படும் அரிச்சல் முனைக்கு பிரதமர் மோடி பார்வையிட உள்ளார். அதன்பிறகு காலை 10.15 மணிக்கு ஸ்ரீ கோதண்டராம சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை செய்யும் பிரதமர் மோடி தரிசனம் செய்கிறார். அதன்பிறகு அங்கிருந்து புறப்பட்டு மதுரை வந்து விமானத்தில் டெல்லி புறப்பட்டு செல்ல உள்ளார்.
இந்நிலையில் தான் பிரதமர் மோடி இன்று செல்லும் 2 இடங்களும் கடவுள் ராமருடன் நெருங்கிய தொடர்பு கொண்ட இடங்களாகும். அரிச்சல் முனை என்பது ராமர் பாலம் இருக்கும் இடம் என கூறப்பட்டு வருகிறது. அதேபோல் கோதண்டராமர் கோவிலும் ராமருடன் நெருங்கிய தொடர்பு உள்ளது. அதாவது கோதண்டராமன் என்ற பெயருக்கு வில்லுடன் உள்ள ராமர் என்ற பொருள் உள்ளது. மேலும் இங்கு தான் விபீஷணன் முதன்முதலில் ராமரை சந்தித்து அடைக்கலம் கேட்டதாகவும், அதன்பிறகு ராமர் வீபீஷணனுக்கு முடிசூட்டு விழாவை செய்த இடம் இதுதான் என கூறப்படுகிறது.
இதனால் தான் பிரதமர் மோடி அயோத்தி ராமர் கும்பாபிஷேகம் நாளை நடைபெற உள்ள நிலையில் இன்று கோதண்டராமர் கோவிலில் தரிசனம் செய்கிறார்.
+ There are no comments
Add yours