வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், “வங்கக்கடலில் நிலை கொண்ட காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது விசாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 510 கி.மீ. தொலைவில் தென்கிழக்கே நிலை கொண்டுள்ளது.
காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது வடமேற்கு திசையில் நகர்ந்து நவம்பர் 16ல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். எனவே இன்றும் நாளையும் குமரி கடல், மன்னார் வளைகுடா, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தமிழக கடற்கரை பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்” என்றார்.
இத்துடன் மீனவர்களுக்கான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அதில் அவர், “நவம்பர் 15, 16,17 ஆகிய தேதிகளில் மத்திய மேற்கு, வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே இதன் காரணமாக மீனவர்கள் இந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.
மேலும் டெல்டா மாவட்டங்களில் கனமழை தொடரும். அடுத்த 24 மணி நேரத்தில் டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, புதுச்சேரி, காரைக்காலில் கனமழைக்கு வாய்ப்பு சென்னை மற்றும் புறநகரில் மிதமான மழை பெய்யக்கூடும்; சில இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும்” என்று தெரிவித்துள்ளார்.
+ There are no comments
Add yours