சென்னை: “பொது வெளியில் அநாகரிமாக, தேவையில்லாமல் எழுப்பப்படும் “க…. அஜித்தே” என்ற இந்த கோஷம் என்னை கவலையடையச் செய்திருக்கிறது. எனது பெயரைத் தவிர்த்து என் பெயருடன் வேறு எந்த முன்னொட்டும் சேர்த்து அழைக்கப்படுவதில் நான் துளியும் உடன்படவில்லை” என நடிகர் அஜித் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: “சமீபமாக முக்கியமான நிகழ்வுகளில், பொதுவெளியில் அநாகரிமாக, தேவையில்லாமல் எழுப்பப்படும் “க…. அஜித்தே” என்ற இந்த கோஷம் என்னை கவலையடையச் செய்திருக்கிறது. எனது பெயரைத் தவிர்த்து என் பெயருடன் வேறு எந்த முன்னொட்டும் சேர்த்து அழைக்கப்படுவதில் நான் துளியும் உடன்படவில்லை. எனது பெயரில் மட்டுமே நான் அழைக்கப்பட வேண்டும் என விரும்புகிறேன்.
எனவே, பொது இடங்களிலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் அசெளகரியத்தை ஏற்படுத்தும் இந்த செயலை நிறுத்துவதற்கு உங்கள் ஒத்துழைப்பை நான் அன்புடன் வேண்டுகிறேன். என்னுடைய இந்த கோரிக்கைக்கு உடனடியாக மூப்பு கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன். யாரையும் புண்படுத்தாமல் கடினமாக உழைத்து, உங்கள் குடும்பத்தை கவனித்துக் கொள்ளுங்கள் மற்றும் சட்டத்தை மதிக்கும் குடிமக்களாக இருங்கள். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அழகான வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள். வாழு & வாழவிடு” என்று அஜித் தெரிவித்துள்ளார்.
பின்புலம் என்ன? – அஜித் படங்களுக்கு ‘அப்டேட்’ கேட்டு அலப்பறையைக் கொடுப்பதில் அவரது ரசிகர்களை அடிச்சுக்க முடியாது. அந்த வகையில் தற்போது ‘விடாமுயற்சி’ படத்துக்காக புது ஸ்டைலை அவர்கள் பின்பற்றத் தொடங்கினர். தியேட்டர்களிலும் பொது நிகழ்ச்சிகளிலும் சம்பந்தமே இல்லாமல் ‘கடவுளே அஜித்தே…’ எனக் கும்பலாகக் கூச்சலிட்டு பார்வையாளர்களை ‘ஜர்க்’ ஆக்கி வருவதுதான் அந்த புது பாணி. இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் பலரும் புலம்பி வந்தனர். ‘விடாமுயற்சி’ படத்தின் ‘ஃபர்ஸ்ட் லுக்’ போஸ்டர் மட்டுமே முதலில் வெளியானதால் படத்தின் ‘அப்டேட்’டை தெரிந்துகொள்ள அஜித் ரசிகர்கள் பயன்படுத்தும் கவன ஈர்ப்பு மந்திரம்தான், இந்தக் ‘கடவுளே அஜித்தே…’ கூச்சல். தாங்கள் மட்டுமல்லாது வெளிநாட்டினரையும் ‘கடவுளே அஜித்தே…’ எனச் சொல்ல வைத்த சம்பவமும் நடந்தது.
போட்டியாளர் ‘தளபதி’ அரசியலில் குதித்துவிட்ட நிலையில் ‘தல’யின் இருப்பைக் காட்டவே அவருடைய ரசிகர்கள் இதைச் செய்வதாக நெட்டிசன்கள் வறுக்கிறார்கள். அதேசமயம் தங்களது ஆதர்ச நாயகனின் படம் குறித்த தகவலைக் கேட்பது ரசிகர்களின் உரிமைதானே என்கிற ஆதரவுக் குரல்களும் ஆங்காங்கே ஒலிக்கின்றன. இப்படி “கடவுளே அஜித்தே…” என இடம், பொருள், ஏவல் இல்லாமல் அப்டேட் கேட்டுவந்த அஜித் ரசிகர்களுக்கு, சமீபத்தில் ‘விடாமுயற்சி’ டீஸரை வெளியிட்டு இன்ப அதிர்ச்சி அளித்தது படக்குழு. இந்நிலையில்தான், அப்படி கோஷம் எழுப்ப வேண்டாம் என்று அஜித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
+ There are no comments
Add yours