பல்லாவரம்: பல்லாவரம் அருகே சாலையில் நடந்து சென்ற பேருந்து ஓட்டுநரை சரமாரியாக தாக்கி பணம், செல்போன் பறித்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை, பழவந்தாங்கல், உழைப்பாளர் நகர், மூவரசன்பேட்டை பிரதான சாலை பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர் (27). இவர், பள்ளிக்கரணையில் உள்ள தனியார் பள்ளியில் பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு தனது மனைவியுடன் சண்டை போட்டு கோபித்துக் கொண்டு, வீட்டில் இருந்த சம்பள பணம் 18 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு பல்லாவரம், அம்மன் நகர் அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரை பின் தொடர்ந்து ஒரே பைக்கில் வந்த மூன்று நபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் பாஸ்கரை சரமாரியாக தாக்கி, அவர் பையில் வைத்திருந்த ரூபாய் 18,000 பணம் மற்றும் விலை உயர்ந்த செல்போன் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பிச் செல்ல முயற்சி செய்தனர்.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பாஸ்கர் கத்தி கூச்சலிடவே அந்த வழியாக வந்த பல்லாவரம் போலீஸார் மூன்று பேரையும் மடக்கிப் பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில், கைது செய்யப்பட்ட மூவரும் திரிசூலம், இலுப்பை தோப்பு தெருவைச் சேர்ந்த குண்டன்(எ) வெங்கடேசன்(23), திரிசூலம் லெட்சுமணன் நகர் பகுதியைச் சேர்ந்த ஜஸ்டின் ராஜ்(24) மற்றும் திரிசூலம், இந்திரா நகர் பகுதியை சேர்ந்த ரியாஸ்(21) என்பது தெரிய வந்தது. இதில், போலீஸாரால் கைது செய்யப்பட்ட ஜஸ்டின்ராஜ் கல்லூரியில் டிப்ளமோ இன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து வருவது விசாரணையில் தெரிய வந்தது. தொடர்ந்து அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
+ There are no comments
Add yours