லடாக்கில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் மலைப் பள்ளத்தாக்கில் விழுந்த கோர விபத்தில் 9 ராணுவத்தினர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
லடாக்கில் ராணுவ வேன் மலைப் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பயங்கர விபத்தில் 9 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த கோர விபத்து இந்திய ராணுவத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அருணாச்சலப் பிரதேசம் மற்றும் லடாக் எல்லைப் பகுதிகளில் சீனாவின் அத்துமீறல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அங்கு ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும், சீனாவின் அச்சுறுத்தலை சமாளிப்பதற்காக அங்கு தினமும் ராணுவ வீரர்களுக்கு கடுமையான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், லே மலைப் பிரதேசத்தில் இருந்து ஆயுதங்களுடன் நியோமா பகுதிக்கு இந்திய ராணுவ வீரர்கள் 10 பேர் இன்று மாலை ஒரு ராணுவ வேனில் சென்று கொண்டிருந்தனர். மிகவும் குறுகலான மலைப்பாதையில் வேன் சென்று கொண்டிருந்தது.
அப்போது மாலை 5 மணியளவில் கியாரி பகுதியில் வேன் சென்று கொண்டிருந்த போது, திடீரென அடர்ந்த பனிமூட்டம் அங்கு சூழ்ந்தது. இதனை எதிர்பார்க்காத ஓட்டுநர் வண்டியை நிறுத்த முயன்ற போது வேன் நிலைத்தடுமாறி அங்கிருந்த பல நூறு அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த சக ராணுவ வீரர்கள் அங்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், இரவு 9 மணியளவில்தான் அந்த வேன் விழுந்து கிடந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விபத்தில் வேனில் இருந்த 9 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். ஒருவர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
+ There are no comments
Add yours