உலகப் புகழ் பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான ஆவணித்திருவிழா நாளை(செப்.4) காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இதனை முன்னிட்டு அதிகாலை ஒரு மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு 01-30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும் , 2.00 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு காலை 5 மணி முதல் ஐந்து முப்பது மணிக்குள் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
மொத்தம் 12 நாட்கள் நடைபெறக்கூடிய இந்த திருவிழாவில் நாள்தோறும் சுவாமியும் அம்பாளும், ஒவ்வொரு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியான சிவப்பு சாத்தி பத்தாம் தேதியும், பச்சை சாத்தி பதினொன்றாம் தேதியும் நடைபெறுகிறது. சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 13 -ம் தேதி நடைபெறுகிறது.
இவ்விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் ஆலய நிர்வாகம் சார்பில் சிறப்பாக செய்யப்பட்டுவருகிறது. இந்த திருவிழாவில் கலந்து கொள்ள நாடு முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள் என்பதால் அதற்கேற்ப அவர்கள் வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தர திருச்செந்தூர் ஆலய நிர்வாகம் முனைப்புடன் செயலாற்றி வருகிறது.
+ There are no comments
Add yours