“குன்றுகளை தின்ற தி.மு.க., மந்திரி”…அண்ணாமலை!

Spread the love

தினமும் புதிய புதிய பாடங்களை படித்தபடியே, கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதயாத்திரையாக கால் பதித்தோம். விளவன்கோட்டிலும் கிள்ளியூரிலும் வித்தியாசமான அனுபவங்கள்.

‘நெல்லை எங்கள் எல்லை; குமரி எங்கள் தொல்லை’ என்று தி.மு.க., தலைவர் கருணாநிதியை புலம்ப விட்ட மண் மற்றும் அதன் கற்றுத் தேர்ந்த மக்கள். கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு மற்றும் கிள்ளியூர் தொகுதி வழியாக செல்லும் நொய்யல் இடது கரை கால்வாய், காமராஜ ரின் ஆட்சிக் காலத்தில் வெட்டப்பட்டது. இந்த நொய்யல் ஆற்றின் கால்வாய் வழியாக, 39 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன.

தற்போது, 19 ஆண்டுகளாக துார்வாரப்படாமல், சட்ட விரோத ஆக்கிர மிப்புக்களால், அதில் முற்றிலுமாக நீர்வரத்து நின்று போய் உள்ளது. செண்பகவல்லி, முல்லைப் பெரியாறு, நொய்யாறு அணை என்று அனைத்தையும், தன் ஊழல் சகோதரரான பினராயி விஜயனிடம், தி.மு.க., அரசு அடகு வைத்துள்ளது.
கன்னியாகுமரியின் வாசனை கிராம்புக்கும், இனிய மட்டி வாழைக்கும், சுவைமிகு மார்த்தாண்டம் தேனுக்கும், தனித்துவத்தை உறுதி செய்யும் புவிசார் குறியீடு, நம் பிரதமரின் பெரு முயற்சியால் வழங்கப்பட்டது.

நாடக அரசியல் நடத்தும் தி.மு.க., அரசின் போலி வாக்குறுதிகள்:

  • குளச்சலில் மீன்பிடி படகு தொழிற்சாலை
  • புதிய மீன்வளக் கல்லுாரிகள் பள்ளிகள்
  • மீனவர்களுக்கு வீடுகள்
  • கன்னியாகுமரியில் ரப்பர் பூங்கா
  • பேச்சிப்பாறையில் தோட்டக்கலை கல்லுாரி
  • கன்னியாகுமரியில் தகவல் தொழில்நுட்ப பூங்கா
  • நாகர்கோவிலில் தொழிற்பேட்டை
  • கல்குளம் மீன்பிடித் துறைமுகம்.

இவையெல்லாம் உருவாக்கப்படும் என்று போலி வாக்குறுதிகளை கொடுத்து விட்டு, இரண்டரை ஆண்டுகளாக, கன்னியாகுமரி மக்களுக்காக எதுவும் செய்யாமல், சாராயக் கடைகளை திறப்பதிலும், சுயலாபம் பெருக்குவதிலும், முழு கவனத்தையும் தி.மு.க., அரசு செலுத்தி வருகிறது.

காங்கிரஸ் கட்சியில் அன்று காமராஜர், கக்கன், பொன்னப்ப நாடார் போன்ற தன்னலமற்ற தலைவர்கள், மக்களுக்காக வாழ்ந்தனர். இன்று, அதே கட்சியில் விஜயதாரணி, ராஜேஷ்குமார், விஜய் வசந்த் என்று வணிகம் பார்ப்பவர்கள் வந்துள்ளனர். பிறகெப்படி, மக்கள் பணிகள் நடக்கும்? அதனால் தான் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகளில், கன்னியாகுமரியில் காங்கிரஸ் வென்ற இடங்களை விட, 18 இடங்களில் கூடுதலாக, பா.ஜ., வென்றுள்ளது.

கன்னியாகுமரியில் பாசனத்திற்கும் பருகுவதற்கும் தண்ணீர் பிரச்னைகள் இருப்பதை, பரவலாக காண முடிந்தது. ஆனால், ‘டாஸ்மாக், கடைகளுக்கு மட்டும் பஞ்சமில்லை.

‘நீரின்றி அமையாது உலகு’ என்ற வள்ளுவர் குறளை, ‘பீர் இன்றி அமையாது தமிழகம்’ என்று மாற்றிய பெருமைக்குரியவர் முதல்வர் ஸ்டாலின். தட்டுப்பாடு இல்லாத டாஸ்மாக் கடைகளும், கட்டுப்பாடு இல்லாத கள்ளச் சாராயமும் தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்துகின்றன. கடந்த ஆட்சியிலே, மதுவுக்கு எதிராக மக்களைத் திரட்டி, பாட்டுக்கள் எல்லாம் பாடிய மேதைகள் கூட, இப்போது போதையில் ஆழ்ந்து விட்டனர்.

மாவட்டத்தின் அமைச்சர் மனோ தங்கராஜ், இங்கிருக்கும் குன்றுகளை தின்று ஏப்பம் விட்டு விட்டார். கன்னியாகுமரி மாவட்டத்தின் கனிம வளங்கள், பக்கத்து மாநிலங்களுக்கு தினமும் 600 லாரிகள் வாயிலாகக் கடத்தப்படுகின்றன. பின்னணியில் மனோ தங்கராஜ்.

பால்வளத் துறையை பதம் பார்க்க இவர் வந்த பின், பால் கவரின் மேல் அச்சிடப்படும் சுதந்திர தின வாழ்த்து, இந்த ஆண்டு அச்சிடப்படவில்லை. காலம் காலமாக அச்சிட்டப்பட்ட சுதந்திர தின வாழ்த்தை நிறுத்தும் துணிச்சல் இவருக்கு எப்படி வந்தது? தேங்காய்பட்டினம் துறைமுகத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய, சீரமைப்பு பணிகளுக்காக, போதிய கல் அனுப்பாமல், கட்டுமான பணிகள் முடங்கியுள்ளன.

இதனால், இங்கு உருவாகும் மணல் தட்டுக்களில் சிக்கி, இதுவரை 50க்கும் மேற்பட்ட படகுகள் கவிழ்ந்துள்ளன. அந்த விபத்துக்களில், இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரித்தாளும் சூழ்ச்சி:

இந்திரா குடும்பமும், கருணாநிதியின் குடும்பமும் சிறுபான்மையினரை துாண்டிவிட்டு பிரித்தாளும் சூழ்ச்சியை தொடர்ந்து செய்கின்றன. கன்னியாகுமரியில் கூட ஹிந்து நாடார்,- கிறிஸ்துவ நாடார் என்ற பிரிவினையை உருவாக்கி, அவர்களைச் சண்டை போட விட்டு, அரசியல் லாபம் பார்க்கும் தி.மு.க., மற்றும் காங்கிரசின் மலிவான அரசியல் சதியை, மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

பா.ஜ.,வின் தாய் கழக மான ஜன சங்கத்தின் முதல் தமிழக தலைவராக இருந்தவர் வி.கே.ஜான். தி.மு.க.,விலோ, காங்கிரசிலோ, ஒரு கிறிஸ்துவர் தலைமை பதவிக்கு வர முடியுமா… மக்களே சிந்தித்துப் பாருங்கள்.

-பயணம் தொடரும்…


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours