2019 சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியை பிடித்தால் மகளிருக்கு ரூ.1000 வழங்கப்படும் என மு.க. ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக வரும் செப்.15ஆம் தேதி இந்தத் திட்டம் தொடங்கிவைக்கப்பட உள்ளது.
இந்த நிலையில் இது தொடர்பாக தமிழக அரசு அறிக்கை ஒன்றை கடந்த சில நாள்களுக்கு முன்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “ஒரு கோடிக்கும் மேற்பட்ட மகளிர்கள் பயன்பெறும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்த ஆய்வுக் கூட்டம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
தொடர்ந்து, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் தொடக்க விழாவானது வருகிற 15-ஆம் தேதி காஞ்சிபுரத்தில் நடைபெற இருக்கிறது. அன்றைய தினமே அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் அமைச்சர்கள் முன்னிலையிலும் நடைபெற இருக்கிறது.
தகுதி வாய்ந்த பெண்களுக்கு உரிமைத் தொகை அவர்களது வங்கிக் கணக்கில் வரும் செப்டம்பர் 15 முதல் கிடைக்கும். இந்த திட்டத்தில் இணைந்து கொள்ள 1 கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் அரசுக்கு வந்துள்ளன. தகுதியுள்ளவர்கள் என நாம் தேர்ந்தெடுத்துள்ளது 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதாவது, திட்டத்தில் அரசின் கணக்கெடுப்பின்படியே 55 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் விடுபட்டுள்ளனர். எனவே இவர்களுக்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பான அறிவிப்புகள் இன்று (புதன்கிழமை) வெளியாகி உள்ளன. அந்த வழிகாட்டு நெறிமுறையில், விண்ணப்பதாரர்களின் விண்ணப்ப முடிவு நிலை குறித்த குறுஞ்செய்தி பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிற்கு 18ம் தேதி முதல் அனுப்பி வைக்கப்படும்.
ஏற்கப்படாத விண்ணப்பதாரர்கள் குறுஞ்செய்தி அனுப்பப்பட்ட 30 நாள்களுக்கு மேல்முறையீடு செய்யலாம். மேல்முறையீடு செய்யப்படும் விண்ணப்பங்கள் 30 நாட்களுக்குள் தீர்வு செய்யப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours