மக்களவை தேர்தல் நெருக்கத்தில் விவசாயிகள் போராட்டம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. தேர்தல் தேதிஅறிவிக்கப்படும் முன்னரே வெற்றிக்கான மதமதப்பில் வளையவரும் பாஜகவுக்கு, விவசாயிகளின் இரண்டாம்இன்னிங்ஸ் போராட்டம் கவலை தந்திருக்கிறது. இதனால் எழும் நேரடி மற்றும் மறைமுக விளைவுகள், தேர்தல்முடிவுகளை பதம் பார்க்குமோ என்ற பதற்றத்திலும் பாஜக ஆழ்ந்திருக்கிறது. தனது திடமான முன்னேற்றம் மட்டுமன்றி எதிர்க்கட்சிகளின் தடுமாற்றங்களும் பாஜகவுக்கான மூன்றாம் முறைஅரியணையை முரசறைந்து வருகின்றன. மேலும், அயோத்தி ராமர் கோயிலுக்கு பெரும்பான்மை மக்களிடையேஎழுந்த ஏகோபித்த வரவேற்பு, பாஜக பக்கம் தாவும் பலதரப்பு தலைகள், அதிருப்தி வாக்குகளுக்கான வாய்ப்புகுறைந்து வருவது… என மோடி 3.0-க்கான சாத்தியங்கள் அதிகரித்து வருகின்றன. எனினும், ஆட்சியைப் பிடிக்கிறோம் என்பதற்கு அப்பால், அறுதிப் பெரும்பான்மையை அடையவே பாஜக வியூகம்அமைக்கிறது. இறுமாப்புடன் அதற்கான பணிகளில் பாய்ச்சலாக விரையும் பாஜக, டெல்லியை நோக்கியவிவசாயிகளின் பேரணியை வேகத்தடையாக எதிர்கொள்கிறது. கடந்த ஓராண்டாகவே பஞ்சாப், ஹரியாணாவின்விவசாயிகள் போராட்டத்தை பாஜக எதிர்நோக்கியது. என்றாலும், தேர்தல் நெருக்கத்தில் வாக்குவங்கியைபாதிக்கும் எதையும் தவிர்க்கவே விரும்புகிறது. எனவேதான், ஒரு பக்கம் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டே, மறுபக்கம் விவசாயிகளை முடக்குவதற்கான ஏற்பாடுகளை முடுக்கி வருகிறது. 6 மாதங்களுக்கான ரேஷன், டீசல் இருப்புடன் முன்னேறும் விவசாயிகள் வெல்லுமா விவசாயிகள் போராட்டம் இந்தியாவில் மட்டுமல்ல… சர்வதேச அளவில் 40-க்கும் மேலான தேசங்களின் தேர்தல் ஆண்டாக 2024 இருப்பதால், விவசாயிகள் வீதிகளில் இறங்கி போராடுவது அதிகரித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் பசுமைஒப்பந்தத்தை எதிர்த்து ஹங்கேரி, போலந்து உள்ளிட்ட நாடுகளின் விவசாயிகள் போராடி வருகின்றனர். போலந்தின்போஸ்னானில் ஆயிரத்துக்கும் மேலான டிராக்டர்களை திரட்டி விவசாயிகள் திமிலோகம் செய்கின்றனர். இந்தியாவில் 2 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயிகள் இதே மாதிரியான போராட்டத்தை நடத்தினார்கல். அப்போதுஅவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உத்திரவாதமளித்த ஆட்சியாளர்கள், அதைக் காற்றில் பறக்கவிட்டுதேர்தலுக்கு தயாராவதை விவசாயிகளால் ஜீரணிக்க இயலவில்லை. 2 ஆண்டுகள் என்றில்லை, எம்.எஸ்.சுவாமிநாதன் குழுவின் பரிந்துரைகள் வெளியான 2004-ம் ஆண்டிலிருந்து தொடரும் விவசாயிகளின் 20 ஆண்டு எதிர்பார்ப்பு ஈடேறியபாடில்லை. ஆட்சிகள் மாறினாலும் ஆள்பவர்களின் பாராமுகம் விவசாயிகளைவேதனையில் தள்ளி வருகிறது. வேளாண் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உட்பட எம்.எஸ்.சுவாமிநாதன் பரிந்துரைகள்மட்டுமன்றி, முந்தைய போராட்டத்தின் போது விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறுவது, உத்தரபிரதேசத்தின் லக்கிம்பூர்–கேரி சம்பவத்தில் மத்திய அமைச்சரின் காரால் மோதி கொல்லப்பட்ட விவசாயிகள்குடும்பத்தினருக்கு நிவாரணம் அளிப்பது உள்ளிட்டவற்றை வலியுறுத்தி அடுத்தகட்ட போராட்டத்தை விவசாயிகள்தற்போது முன்னெடுத்துள்ளனர்.