75-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு,சென்னை காமராஜர் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை பகுதியில்ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றி வைத்து, அணிவகுப்பு மரியாதை செய்ய உள்ளார். இந்தியா கடந்த 1950-ம் ஆண்டு ஜன.26-ம் தேதி குடியரசானது. இந்த நாளை ஆண்டுதோறும் குடியரசு தினமாககொண்டாடி வருகிறோம். அந்த வகையில், இந்தாண்டு குடியரசு தினம் நாளை ஜன.26-ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. தமிழக தலைநகர் சென்னையில், மெரினா கடற்கரையில் உள்ள காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலைபகுதியில் அருகே அமைக்கப்பட்டுள்ள கொடிமரத்தில், காலை 8 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்.. காமராஜர் சாலையில் காந்தி சிலை பகுதியில் பல ஆண்டுகளாக குடியரசு தின நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்தன. அப்பகுதியில் தற்போது மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறுவதால், கடந்தாண்டு முதல் குடியரசு தின நிகழ்ச்சிகள், உழைப்பாளர் சிலை பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. குடியரசு தின விழாவில் தேசிய கொடியை ஏற்றிவைக்கும் ஆளுநர், முப்படையினர், காவல்துறையினர், தேசியமாணவர் படை, பல்வேறு காவல் பிரிவினர், வனம் மற்றும் தீயணைப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதைநடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து, பல்வேறு கலைக்குழுக்களின் நடன, நாட்டிய நிகழ்ச்சிகள், பள்ளி, கல்லூரி மாணவிகளின்ஆடல் பாடல் நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. முப்படைகளின் கவச வாகனங்கள், தமிழகத்தின் பல்வேறு துறைகளின் திட்ட விளக்கங்கள் அடங்கிய 21 அணிவகுப்பு வாகனங்கள் வலம் வரும். மத நல்லிணக்கத்துக்கான கோட்டை அமீர் விருது, திருத்திய நெல் சாகுபடிக்கான விருதுகள், மதுவிலக்குதொடர்பான காந்தியடிகள் விருதுகள் உள்ளிட்ட விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார். குடியரசு தினத்தை முன்னிட்டு, நேற்று வரை 3 முறை அணிவகுப்பு மரியாதை ஒத்திகைகள் நடத்தப்பட்டுள்ளன. நாளை குடியரசு தின நிகழ்ச்சிகள் நடைபெறுவதை முன்னிட்டு, நிகழ்ச்சிமுடியும் வரை, அப்பகுதியில் போக்குவரத்துதடை செய்யப்பட்டிருக்கும்.